இலங்கையின் கனிம மணல் அகழ்வு: பொருளாதார வாய்ப்பா அல்லது சூழலியல் அபாயமா?

எழுத்தாக்கம்: அப்துல் பாஸித் பஷீர்

நாம் பெரும்பாலும் இலங்கையின் கடற்கரைகளை அழகிய மணற்பரப்பாகவும், சுற்றுலா துறையின் அடையாளமாகவும் மட்டுமே பார்க்கிறோம். அவற்றிற்கு அப்பால், பில்லியன் டொலர் மதிப்புள்ள முக்கிய கனிம வளங்களை அது தன்னுள் கொண்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா?

ஆனால், இந்த இயற்கைச் செல்வம் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்திற்கு ஒரு வாய்ப்பா, அல்லது சுற்றுச்சூழலுக்கு ஒரு புதிய அச்சுறுத்தலா என்பதே பாரிய கேள்வி!!! காரணம், இந்தக் கடற்கரைகளின் அடியில் ஒரு பிரமாண்டமான தொழிற்துறைப் போட்டி அமைதியாக தீவிரமடைந்து வருகிறது. 2026-ஆம் ஆண்டில், கனிம மணல் அகழ்வு தொடர்பான சட்ட அமுலாக்கங்களும் புதிய கொள்கை முடிவுகளும் தீவிரமடைந்துள்ள சூழலில், கடலோரச் சூழலியல் பாதுகாப்பிற்கும் (Marine Ecosystem Conservation) கனிமப் பொருளாதாரச் சுரண்டலுக்கும் (Mineral Resource Exploitation) இடையிலான போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

மன்னார் மற்றும் தெற்குக் கரையின் பிரமாண்டத் திட்டங்கள்

மன்னார் தீவில் ஆஸ்திரேலியாவின் டைட்டானியம் சேண்ட்ஸ் (Titanium Sands) நிறுவனம் சுமார் 318 மில்லியன் தொன் கனிம மணல் வளத்தைக் கொண்ட பெரிய அளவிலான திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இங்கு ஆழமற்ற மணல் படிவுகளில் இருந்து டிரெட்ஜிங் (Dredging) முறையில் இல்மனைட் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், தெற்கு கடற்கரையில் ‘கேபிட்டல் மெட்டல்ஸ்‘ (Capital Metals) நிறுவனத்தின் ‘தப்ரபேன்‘ (Taprobane) திட்டம் தொழிற்துறை சுரங்க உரிமங்களுடன் கட்டுமானத்தை நோக்கி நகர்கிறது.

இவற்றோடு, இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI) தென்–கொரிய கூட்டாண்மையுடன் முன்னெடுக்கப்படும் குவார்ட்ஸ் மற்றும் சிலிக்கா மணல் பதப்படுத்தும் தொழில்நுட்ப ஆராய்ச்சியும் இணைந்துள்ளது. இந்த திட்டங்கள் பொருளாதார ரீதியாக கவர்ச்சிகரமானதாக தோன்றினாலும், சூழல் மற்றும் சமூக ரீதியில் நாட்டின் சுற்றுச்சூழல் சமநிலைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

www.lanka-excursions-holidays.com

சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் அபாயங்கள்

டைட்டானியம் சேண்ட்ஸ் திட்டம் முதற்கட்டமாக 2 ஹெக்டேர் பரப்பளவில் 12 மீட்டர் ஆழத்திற்கு அகழத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீரைக் காப்பாற்ற மூடிய சுழற்சி நீர் மறுசுழற்சி முறைகள்  முன்மொழியப்பட்டாலும் (closed-loop system), மன்னாரின் பறவைகள் புகலிடம் மற்றும் களப்பு நீர்நிலைகளைப் பாதுகாக்க முழுத் தீவுக்குமான சூழலியல் தாக்க மதிப்பீடு (whole-island Environmental Impact Assessment) செய்யப்பட வேண்டும் என உள்ளூர் சூழலியல்  நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

தப்ரபேன் திட்டச் சூழலியல் அறிக்கையின்படி, மணற்குன்றுகளை அகழ்வதால் 2 அரிய தாவரங்கள், 5 இலங்கைக்கு மட்டுமே உரித்தான தாவரங்கள் மற்றும் 12 தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான தாவர இனங்கள் அழியும் அபாயம் உள்ளது. மேலும், சின்ன முகத்துவாரம், பெரிய முகத்துவாரம் மற்றும் கொராலே களப்பு நீர்நிலைகளை நம்பியுள்ள சுமார் 3,000 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது. கடலோர மணற்குன்றுகள் என்பவை வெறும் மணல் திரள்கள் மட்டுமல்ல, அவை புயல் கரையேற்றங்களிலிருந்து கரைகளைப் பாதுகாக்கும் அரண்களாகும். இவற்றை அழிப்பது கடலோர அரிப்பைத் தீவிரப்படுத்தி, நிலத்தடி நீரை உவர்நீராக மாற்றும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த தாக்கங்கள் மற்றும் எதிர்கால எண்ணெய் ஆய்வு

தனித்தனி திட்டங்களாகப் பார்க்கும்போது சிறியதாகத் தோன்றும் பாதிப்புகள், ஒன்றாகச் சேரும்போது பேரழிவாக மாறக்கூடும். மன்னார் வளைகுடாவில் முன்மொழியப்பட்டுள்ள கடலோர எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுத் தொகுதிகள், துறைமுக அகழ்வுப் பணிகள் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகியவை ஒரே நேரத்தில் நிகழும்போது, கடலோர மற்றும் கடல் சூழல் அமைப்புகள் மீதான அழுத்தம் பன்மடங்காகிறது.

இது கடலோர பவளப்பாறைகள், கடற்புல் வெளிகள், சதுப்புநிலங்கள் மற்றும் புலம்பெயர் பறவைகளின் வாழ்விடங்கள் என ஒட்டுமொத்த தாக்கமும் பெரும் சூழலியல் அழிவை மட்டுமல்லாது இலங்கையின் கடல் உணவுப்பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கும்.

news.mongabay.com/

நாம் அறிய வேண்டியது

இலங்கையில் சட்டவிரோத கனிம மணல் அகழ்வுக்கு எதிராக நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சிலிக்கா, இல்மனைட் மணல் அகழ்வுகள் தொடர்பில் நீதிமன்றத் தடை, கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், 2026 ஜூனில் அறிமுகமான தேசிய கனிமக் கொள்கை,  கனிம மணல் ஏற்றுமதியைத் தடுத்து, உள்நாட்டு பெறுமதியாக்கம் (Value Addition), வெளிப்படையான போட்டி ஏலம் மற்றும் நிலையான கனிம வள மேலாண்மையை வலியுறுத்துகிறது.

ஆனால், இவற்றுக்கு மேலாக தனது சமூக-பொருளாதார அபிவிருத்திக்கு கனிம வளங்களைப் பயன்படுத்துவது அவசியமானது என்றாலும், அதற்காக  இலங்கை தனது  நீண்டகால சூழலியல் மற்றும் சமூக அமைப்புகளை பலியிட முடியாது. துல்லியமான அடிப்படை சுற்றுச்சூழல் தரவுகள், சுயாதீன கண்காணிப்பு மற்றும் உள்ளூர் சமூகங்களின் உண்மையான பங்களிப்புடன் கூடிய மூலோபாய அணுகுமுறையே நாட்டிற்கு உடனடி தேவையாகும்.

news.mongabay.com

Leave a Reply

The Pearl Protectors

இலங்கையின் கனிம மணல் அகழ்வு: பொருளாதார வாய்ப்பா அல்லது சூழலியல் அபாயமா?

எழுத்தாக்கம்: அப்துல் பாஸித் பஷீர் நாம் பெரும்பாலும் இலங்கையின் கடற்கரைகளை அழகிய மணற்பரப்பாகவும், சுற்றுலா துறையின் அடையாளமாகவும் மட்டுமே பார்க்கிறோம். அவற்றிற்கு அப்பால், பில்லியன் டொலர் மதிப்புள்ள முக்கிய கனிம வளங்களை அது தன்னுள்

Read More »