இலங்கையின் ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகள் எதிர்கொள்ளும் மறைமுக இரசாயன அச்சுறுத்தல்கள்: ஒரு விழிப்புணர்வுப் பார்வை

எழுத்தாக்கம் : அப்துல் பாஸித் பஷீர்

சந்தையில் வழக்கமாக வாங்கும் மீன் கிடைக்கவில்லை என்றால், அல்லது அதன் விலை உயர்ந்திருந்தால், அதன் காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்ததுண்டா? சமூக-பொருளாதார காரணங்களுக்கு அப்பால் அதற்கான மிக முக்கிய காரணி, நம் சமுத்திரங்களின் ஆரோக்கியத்தில்தான் மறைந்துள்ளது.

இலங்கையின் கடல் என்பது வெறும் இயற்கை வளம் மட்டுமல்ல, அது எமது நாட்டின் உயிர்நாடியாகும். சுமார் 1,620 கி.மீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட இந்தத் தீவு, 1,800-க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் (Fish Species) மற்றும் 380-க்கும் அதிகமான பவளப்பாறை (Coral Reefs) இனங்கள் வாழும் வளமான கடல்சார் பல்லுயிர் மண்டலமாக (Marine Biodiversity Hotspot) விளங்குகிறது. தென்மேற்குப் பவளப்பாறைகள், கல்பிட்டி மீன்வளம், மற்றும் கரையோர மீனவ சமூகங்கள் இதன் பெறுமதிக்குச் சான்றாக உள்ளன. அதேவேளை, சுமார் 30% மக்கள் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர். 60% நகரங்கள் கடற்கரையை ஒட்டியே அமைந்துள்ளன. கண்டல் காடுகள், கடலோர ஈரநிலங்கள், கடல் புற்றரைகள் போன்ற 21 கடல்சார் வாழிடங்களில் (Marine Habitats) 10 ஏற்கனவே அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. மேலும் சமுத்திர மாசுபாட்டில் சுமார் 80% மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறது என்பதும், இந்த அரிய கடல்சார் செல்வத்தைப் பாதுகாப்பது சுற்றுச்சூழல் மட்டுமல்ல தேசிய வாழ்வாதாரத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும் என்பதை வலியுறுத்துகிறது.

இலங்கையின் கடல்சார் எதிர்காலம், நமது ஆழ்கடலின் பரப்பளவால் அல்ல, து கரையோரம் வரை பரவி இருக்கும் இரசாயனச் சமநிலை எவ்வளவு திறம்படப் பாதுகாக்கப்படுகிறது என்பதில் தான் தங்கியுள்ளது. ஆனால், அந்த அழகிய நீல நிறத்திற்கு கீழால் ஒரு மறைமுக அச்சுறுத்தல் உருவெடுத்து வருகிறது. அதுதான் ‘சமுத்திர இரசாயன மாசுபாடு (Marine Chemical Hazards).

பெரும்பாலும் நாம் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். ஆனால், இன்று நாம் சிந்திக்கவேண்டிய மிக முக்கியமான கேள்வி, இலங்கையின் ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகள் ஆகிய இரண்டிற்கும் பொதுவான ஒரு இரசாயன அச்சுறுத்தல்-தளம் இருக்க முடியுமா? என்பது குறித்த விழிப்புணர்வு நமக்கு அவசியமாகிறது. ஆனால் இலங்கையில் ஆழ்கடல் ரசாயன கண்காணிப்பிற்கான தனித்த தேசிய தரவு இன்னும் குறைவாகவே உள்ளது. இந்த இரண்டு வலயங்களும் எவ்வாறு ஒரே அச்சுறுத்தலின் கீழ் வருகின்றன என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது.

புகைப்படம்: இலங்கை கடற்பரப்பில் ஏற்படும் எண்ணெய்க் கசிவுகள் மற்றும் அபாயகரமான இரசாயனக் கசிவுகள்.

பொதுவான அடிப்படை :

கடலோரச் சூழலியல் (Coastal Ecology) மற்றும் ஆழ்கடல் சூழலியல் (Deep-sea Ecology) ஆகிய இரண்டும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருந்தாலும், இரசாயன அச்சுறுத்தல்களைப் பொறுத்தவரை அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. கடலோரப் பகுதியில் ஏற்படும் இரசாயனக் கசிவுகள் அல்லது மாசடைதல்கள் நீரோட்டங்கள் வழியாக ஆழ்கடலுக்குக் கடத்தப்பட வாய்ப்புள்ளது. அதேவேளை, ஆழ்கடலில் நிகழும் மாற்றங்கள் இறுதியில் கடற்கரையோரப் பகுதிகளின் சமநிலையைப் பாதிக்கின்றன.

இலங்கையின் வளங்கள் :

இலங்கையிடம் சில வலுவான கட்டமைப்புகள் உள்ளன. உயர்கல்வி நிறுவனங்களில் கடல்சார் சூழலியல் (Marine Ecology) , இரசாயனவியல் (Chemistry) உள்ளிட்ட துறைகளில் திறமையான ஆய்வாளர்கள் உருவாகி வருகின்றனர். தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (NARA), கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA), கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் (CCD), மற்றும் மீன்வள அமைச்சு போன்ற நிறுவனங்கள், பல தசாப்தங்களாக இலங்கையின் கடல்சார் வள மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இலங்கையின் கல்விசார் பின்புலம், தொழில்முறை அனுபவம் மற்றும் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.

தற்போதைய இடைவெளிகள் மற்றும் சவால்கள் :

இந்த வளங்கள் அனைத்தும் ஒரு சிறந்த அடித்தளமாக இருந்தாலும், அவற்றை நாம் எவ்வாறு ஒருங்கிணைக்கப் போகிறோம் என்பதிலேயே நமது வெற்றி தங்கியுள்ளது.

நிபுணத்துவ (Expertise) அடிப்படையில் ஆழ்கடல் இரசாயன மாற்றங்கள் மற்றும் சூழல்நச்சியல் (Ecotoxicology) குறித்த பிரத்யேகமான நிபுணத்துவம் இலங்கையில் இன்னும் போதுமான அளவில் வளர்ச்சி பெறவில்லை. மேலும் தொழில்நுட்பத் திறன் (Technical Capability) ரீதியாக ஆழ்கடலில் உள்ள இரசாயன அபாயங்களைக் கண்டறிந்து கண்காணிப்பதற்கான நவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் அதிநவீன ஆய்வக வசதிகளில் இலங்கை இன்னும் பின்தங்கியே உள்ளது.

அத்தோடு சமுத்திர பாதுகாப்பிற்கான கொள்கை மற்றும் ஆளுகைச் சட்டகம் (Policy and Governance Framework) ஓரளவிற்கு இருந்தாலும், ஆழ்கடல் மற்றும் இரசாயனப் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் தெளிவான சட்டக் கட்டமைப்பு அல்லது நிர்வாக ரீதியான ஒருங்கிணைப்பு இன்னும் மேம்படுத்தப்படவேண்டி உள்ளது. முறையான ஆய்வுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சர்வதேச தரத்திலான கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் சவால்கள் நீடிக்கின்றன.

கடந்த காலத்தில், இலங்கையின் கடலோரச் சூழல் இயற்கைச் சமநிலையைத் தாங்கிய ஒரு வலுவான உயிரியல் அமைப்பாக (Biodiversity Structure) விளங்கியது. ஆனால் இன்று, மனிதச் செயற்பாடுகளால் ஏற்படும் மாசுபாடு, வாழிடச் சீரழிவு (Habitat Degradation) மற்றும் எல் நினோ (El Niño) போன்ற காலநிலை மாறுபாடுகள் இந்த இயற்கை அரண்களை படிப்படியாக பலவீனப்படுத்தி வருகின்றன. இந்தப் போக்கு தொடருமானால், எதிர்காலத்தில் கடல்சார் பல்லுயிர், மீன்வளம், கரையோர சமூகங்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் நீலப் பொருளாதாரத்தின் (Blue Economy) நிலைத்தன்மை ஆகியவை கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

தர்க்கரீதியாகப் பார்க்கும்போது, இலங்கையிடம் உள்ள கல்விசார் வளங்களை விட, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியான பின்னடைவுகள் (Setbacks) மேலோங்கியே காணப்படுகின்றன. இந்த இடைவெளிகளை நிரப்பாமல் நாம் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.

புகைப்படம்: Deepwater Horizon எண்ணெய்க் கசிவு, ஆழ்கடல் வாழிடங்கள் முதல் 1,300 மைலுக்கும் அதிகமான கரையோரப் பகுதிகள் வரை முழு அமெரிக்க வளைகுடாவையும் (முன்னர் மெக்சிகோ வளைகுடா) பாதித்தது.

எதிர்காலத்திற்கான மூலோபாயத் திட்டங்கள்

இரசாயன அச்சுறுத்தல்களை முறியடிக்க அரசாங்கம், கல்வித்துறை மற்றும் தொழில்முறை சூழல்களில் ஒருங்கிணைந்த மாற்றங்கள் அவசியமாகும்.

குறுகிய காலத்தில், இலங்கையின் கடலோர மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் உருவாகும் இரசாயனப் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தொடர்ந்து மதிப்பிடக்கூடிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு வலையமைப்பை (Integrated Monitoring Network) உருவாக்குவது முதன்மையாக இருக்க வேண்டும். அதேவேளை, தற்போதுள்ள சமுத்திரம் சார் ஒழுங்குமுறைச் சட்டகங்களில் இரசாயன அபாயங்கள் தொடர்பான தெளிவான பிரிவுகளைச் சேர்த்து அவற்றை வலுப்படுத்துவதும் அவசியமாகும். இதனுடன், ஆராய்ச்சியாளர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இடையே ஆய்வுத் தகவல்களை விரைவாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை (Centralized Database) உருவாக்குவது, அறிவியல் அடிப்படையிலான முடிவுகளுக்கு உறுதியான அடித்தளமாக அமையும்.

நீண்ட கால நோக்கில், அரசாங்கம், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பிரத்யேக கடல்சார் நச்சியல் (Marine Ecotoxicology) ஆராய்ச்சி மையத்தை நிறுவுவது காலத்தின் தேவையாகும். இதனுடன், சர்வதேச நாடுகள் மற்றும் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களுடன் தொழில்நுட்பப் பரிமாற்றங்களையும் அறிவியல் ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்தி, ஆழ்கடல் கண்காணிப்பிற்குத் தேவையான அதிநவீன கருவிகள், பகுப்பாய்வு வசதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் ஆழ்கடல் இரசாயனவியல் (Deep-sea Chemistry), கடல்சார் நச்சியல், மற்றும் சூழலியல் கொள்கை மேலாண்மை (Environmental Policy Management) போன்ற துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், எதிர்கால கடல்சார் சவால்களை அறிவியல் ரீதியாக எதிர்கொள்ளும் திறன் கொண்ட புதிய தலைமுறை நிபுணர்களை உருவாக்க முடியும்.

கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் இரசாயன அச்சுறுத்தல்கள் என்பது ஏதோ ஒரு தூரத்து பிரச்சினை அல்ல, அவை நமது உணவுச் சங்கிலியையும், பொருளாதாரத்தையும், ஒட்டுமொத்த சூழலியலையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியவை. அது ஒரு தேசிய கடமை. நமது ஆழ்கடல் பொக்கிஷங்களை பாதுகாக்க நாம் தயாராகாவிட்டால், எதிர்கால சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்?

முகப்புப் படம்: தீ விபத்துக்குப் பின்னர், ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் MV X-Press Pearl கப்பல் மூழ்கியது. புகைப்படம்: இலங்கை விமானப்படை / Reuters

புகைப்படம்: Marine Oil Spill Thickness (MOST) திட்டம், கலிபோர்னியாவின் சன்டா பார்பரா கடற்கரைக்கு அப்பால் இயற்கையாக உருவாகும் எண்ணெய் கசிவுப் பகுதியில் அதன் தடிமனை அளவிடுவதற்கான தரவுகளைச் சேகரிக்கிறது.

Leave a Reply

The Pearl Protectors

இலங்கையின் ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகள் எதிர்கொள்ளும் மறைமுக இரசாயன அச்சுறுத்தல்கள்: ஒரு விழிப்புணர்வுப் பார்வை

எழுத்தாக்கம் : அப்துல் பாஸித் பஷீர் சந்தையில் வழக்கமாக வாங்கும் மீன் கிடைக்கவில்லை என்றால், அல்லது அதன் விலை உயர்ந்திருந்தால், அதன் காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்ததுண்டா? சமூக-பொருளாதார காரணங்களுக்கு அப்பால் அதற்கான

Read More »